×

ஜனநாயகத்தின் மீது மோடிக்கு நம்பிக்கை இல்லை; நாடாளுமன்றத்தையே அவமதித்து வருகிறார்: மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு..!

டெல்லி: ஜனநாயகத்தின் மீது மோடிக்கு நம்பிக்கை இல்லை என மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதுதொடர்பாக, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அதன் பிறகே அவை விவாதத்தில் பங்கேற்போம் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க இறுதி முயற்சியாக, ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கான நோட்டீசை வழங்கியதும், விவாதத்திற்கு ஏற்று கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்றம் கூடியது. மணிப்பூர் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்தனர். அப்போது, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி மக்களவையில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவை தலைவர் ஓம் பிர்லாவின் இருக்கை முன் பதாகைகளுடன் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதனால் அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடங்கி இருக்கிறது. ஆனால் பிரதமர் ராஜஸ்தானில் அரசியல் செய்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தையே அவமதித்து வருகிறார். மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர். இதுபோன்ற அரசியலுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் இவ்வாறு கூறினார்.

The post ஜனநாயகத்தின் மீது மோடிக்கு நம்பிக்கை இல்லை; நாடாளுமன்றத்தையே அவமதித்து வருகிறார்: மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு..! appeared first on Dinakaran.

Tags : Modi ,Parliament ,Malligarjuna Karke ,Delhi ,Manipur ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...